தனி நீதிபதியின் உத்தரவால் பொதுநலன் பாதிக்கப்படுவதாக புகார்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

10 சக்கரத்திற்கும் மேல் உள்ள 700 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இளஞ்சிறையைச் சேர்ந்த பினோய், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பலவகையான கட்டுமானப் பணிகள் பாதித்துள்ளன. எனவே, அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்திருந்தார்.

கனிமவளங்கள்
கனிமவளங்கள்

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 10 சக்கரத்திற்கும் மேற்பட்ட 700 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து கனிமவளத்துறை கூடுதல் தலைமை செயலர், போக்குவரத்து துறை ஆணையர் ஆகியோர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.

10 சக்கர லாரிகள் கனிமங்கள் ஏற்றிச்செல்ல தடை
10 சக்கர லாரிகள் கனிமங்கள் ஏற்றிச்செல்ல தடை

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, ‘‘தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சாலைகளும் பாதிக்கிறது. வாகனத்தின் எடை மற்றும் வேகத்தின் அளவை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு. பொதுநலன் கருதியே அரசு முடிவெடுத்தது. தனி நீதிபதியின் உத்தரவால் பொதுநலன் மட்டுமின்றி, அரசின் கொள்கை ரீதியான முடிவும் பாதிக்கிறது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தினமும் 700 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் தனி நீதிபதியிடம் நிலுவையில் உள்ள பிரதான வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவும், வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in