உக்ரைனில் மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக மோசடி; டாக்டருக்கு முன்ஜாமீன் மறுப்பு!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

உக்ரைன் நாட்டில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக கூறி, 14 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில், டில்லி மருத்துவருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து, டில்லியில் மருத்துவராக பணியாற்றி வரும் ஜோஹிதாதித்யா, உக்ரைன் நாட்டில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக கூறி, நவீன் வர்ஷா என்பவரின் தந்தையிடம், 7.41 லட்சம் ரூபாயும், கவியரசு என்பவரது தந்தையிடம் 7.55 லட்சம் ரூபாயும் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், இந்தப்புகாரின் அடிப்படையில் ஜோஹிதாதித்யா, அவரது தந்தை மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளில் கைதாவதை தடுக்கும் விதமாக முன் ஜாமீன் கோரி டாக்டர் ஜோஹிதாதித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி..டீக்காராமன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ’2018-ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக ,2019-ல் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இடம் வாங்கிக் கொடுக்கப்பட்டதாகவும், படிப்புக்கு பணம் செலுத்தப் பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், மனுதாரரை விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41-ன்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றமும், மனுதாரரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, “விசாரணைக்கு ஆஜராகும்படி மனுதாரருக்கு வாய்ப்பு அளித்தும், அவர் ஆஜராக வில்லை என்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி, மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in