சொந்த தங்கை மகளைக் கொன்ற பெரியம்மா... விசாரணையில் சொன்ன அதிர்ச்சி காரணம்!

சொந்த தங்கை மகளைக் கொன்ற பெரியம்மா... விசாரணையில் சொன்ன அதிர்ச்சி காரணம்!

நகைக்காக ஆசைப்பட்டு  தனது சொந்த சகோதரியின் மகளை கொலை செய்த பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகள் ராஜலட்சுமி (21) வீட்டில் இருந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி காணாமல் போனார். அவரது பெற்றோர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் 12ம் தேதி இதுகுறித்து  புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீஸார் பவுன்ராஜ் வீட்டு பின்புறம்  வைக்கோல் படப்பின் அருகில் சாக்கு மூட்டையில் கிடந்த ராஜலட்சுமியின் சடலத்தை  மீட்டனர். அவர்களின் விசாரணையில் காணாமல் போன அன்று ராஜலட்சுமி அவருடைய பெரியம்மா சாந்தி என்பவர் வீட்டிற்கு சென்றதாக தெரிய வந்தது.

அதையடுத்து ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளர் சாரதா  தலைமையிலான போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சுப்புராஜ் மனைவி சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜலட்சுமி அணிந்திருந்த நகைக்காக ஆசைப்பட்டு அவரை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்து நகைகளை திருடியதை சாந்தி ஒப்புக் கொண்டார்.

மேலும் அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி மகன் சரவணன் என்பவர் உதவியுடன்  ராஜலட்சுமியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் படப்பின் அருகில் போட்டு விட்டு  வெளியூருக்கு சென்று விட்டதாக  அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை மதுரை மாவட்ட ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்தார். ராஜலட்சுமியை கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 20,000 அபராதம் விதித்தும், கொலையை மறைக்க உதவிய சரவணனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in