5 நாட்களாக அச்சுறுத்தல்... சிறுத்தையை சுட்டுக்கொன்றது வனத்துறை

 சிறுத்தை
சிறுத்தை

பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களாக சுற்றித்திரிந்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. சுமார் 3 நாட்களாக சிறுத்தை வனத்துறையினரின் பார்வையில் சிக்காததால், அதனை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டது.

இருப்பினும் 5 நாட்களாக சிறுத்தை வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்தது. இந்நிலையில் 5வது நாளான இன்று, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் குட்லு கேட் அருகே சிறுத்தை நடமாடுவதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து, வலைகள் மற்றும் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டனர்.

 சிறுத்தை நடமாட்டம்
சிறுத்தை நடமாட்டம்

அப்போது அங்கிருந்த புதர்களில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, வனப்பணியாளர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் மீது பாய்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு சிறுத்தையை பிடித்தனர். பலத்த காயமடைந்த சிறுத்தையை பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கால்நடை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

சிறுத்தை
சிறுத்தை

சிறுத்தை சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வனப்பணியாளர்களின் உயிரை காக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பெங்களூரு புறநகர் முதன்மை வனப்பாதுகாவலர் லிங்கராஜு தெரிவித்துள்ளார். சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தால், சுமார் 5 நாட்களாக அச்சத்தில் வசித்து வந்த மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in