பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை

போக்சோ சட்டத்தின் கீழ் கைது
பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை

மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதுடன், அதை வீடியோ பதிவுசெய்து மிரட்டிய ஆசிரியையும், அவரது நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காதலனுடன் தனியே செல்லும் பெண்களை மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்முறை நிகழ்த்திய சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதனை விஞ்சும் வகையில் ஆசிரியை ஒருவரே மாணவர்களை கூட்டாக பாலியல் தேவைக்குப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 3 மாணவர்களுடன் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ மதுரையில் பரவியது. அந்த ஆசிரியை மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால், அதுகுறித்த விசாரணையில் இறங்கினர் போலீஸார். அந்த வீடியோ பரப்பப்பட்ட சமூக வலைத்தளங்களை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்தபோது, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனில் இருந்தே அந்த வீடியோ பலருக்குப் பரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த மாணவரைப் பிடித்து விசாரித்தபோது, தனது மாமா வீரமணி(39)தான் அந்த வீடியோவை அனுப்பிவைத்ததாகத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் வீரமணியை பிடித்து விசாரித்தபோது, அந்த வீடியோவில் இருப்பது அரசு பள்ளி ஆசிரியை என்றும், அவருடன் இருக்கும் மாணவர்கள் அவரிடம் டியூசன் படிப்பவர்கள் என்றும் தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.

பிடிபட்ட வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது.

அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார். பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார். இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை, வீரமணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பாலியல் ரீதியாகச் சீண்டுவதும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றம் என்பதால், அவர்கள் மீது அந்தப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆசிரியை பயன்படுத்திய செல்போன், லேப்டாப் போன்றவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், சில வீடியோக்களில் அந்த ஆசிரியையே இருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர். வேறு மாணவர்கள் யாரேனும் இந்த ஆசிரியையால் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் கூறலாம் என்றும், அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படாது என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.