
உத்தரப்பிரதேசத்தில் மின்சாரம் பாய்ந்து துடித்துக் கொண்டிருந்த குழந்தையை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய முதியவரின் செயல் அனைவரின் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. நகரின் கரடு, முரடான ஒரு சாலையில், தண்ணீர் தேங்கியிருந்தது. அப்போது, அந்த வழியே சென்றுகொண்டிருந்த 4 வயது சிறுமி ஒருவர், அங்கிருந்து ஒரு மின் கம்பத்தில் கையை வைத்தபோது திடீரென மின்சாரம் தாக்கி அவளை தூக்கி வீசியிருக்கிறது.
அப்போது அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் அந்த குழந்தை தவறி கீழே விழுந்து விட்டதாக நினைத்து அதன் அருகில் சென்று குழந்தையைத் தூக்க முயற்சித்துள்ளார். அப்போது அவருக்கும் மின்சாரம் தாக்கியிருக்கிறது. சுதாரித்துக்கொண்ட அவர், உடனே அங்கிருந்து நகர்ந்திருக்கிறார்.
அங்கிருந்தவர்கள் பலரும் அந்த குழந்தைக்கு உதவ முன்வந்த போதிலும் மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்ததால் யாரும் நெருங்கவில்லை. அப்போது அந்த வழியாக ரிக்சாஷாவில் பயணித்த ஒரு முதியவர் இதைப் பார்த்துவிட்டு உடனடியாக இறங்கி நிலைமையைக் கவனித்தார். குழந்தை மீது மின்சாரம் பாய்வதைக் கண்ட அவர் அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக, அதை குழந்தையை பிடிக்கச்செய்து தன் பக்கமாக இழுத்து காப்பாற்றினார்.
அதனால் அந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த முதியவரை அனைவரும் வெகுவாக பாராட்டினர். பிரதான மின்சாரம் செல்லும் பாதையில் மின்கம்பம் இணைக்கப்பட்டுள்ளதால் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளதாக அப்பகுதி மின்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.