
திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே உள்ள பள்ளிப்பட்டு என்ற பகுதியில் இருந்து சென்னையை நோக்கி பாய்கிறது கொசஸ்தலை ஆறு. இதன் கழிமுகப்பகுதி சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ளது. அந்த பகுதியைச் சுற்றியுள்ள எட்டு கிராம மீனவர்களின் வாழ்வாதாரமாக இந்த ஆறு உள்ளது.
இந்நிலையில், திடீரென கொசத்தலை ஆற்றில் வரக்கூடிய நீர் மஞ்சள் நிறமாக மாறியது. இதனால், அச்சமடைந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு உடனடியாக கரை திரும்பினர். இதுதொடர்பாக, அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், " ஆற்றைச் சுற்றியுள்ள பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஆற்றில் கலப்பதினால் தான் நீர் இதுபோன்று மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதாகவும், இதனால் அந்த பகுதியில் மீன் பிடி தொழில் பாதிக்கப்படுகிறது" என்றனர்.
மேலும் இதேபோல எண்ணெய் கலந்த நீர் இந்த பகுதியில் கலக்கும்போது மீன்கள் வரத்து குறைவதோடு, இறால், நண்டு போன்றவற்றின் இனப்பெருக்கம் கூட பாதிக்கப்பட்டு முற்றிலுமாக மீன்வளம் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த பயணும் இல்லை என தெரிவிக்கும் மீனவர்கள், அரசு உடனடியாக தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.