
கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள கோடநாடு எஸ்டேட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கால போனஸ் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும், பண்டிகை நெருங்கியுள்ள போதும், இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை.
இதனால் கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து, தொழிலாளர்கள் எஸ்டேட் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 200-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.