அதிர்ச்சி... கிங்ஃபிஷர் பீரில் உயிருக்கு ஆபத்தான கெமிக்கல்கள்... 78,678 பீர் பாட்டில் பெட்டிகள் பறிமுதல்!

கிங்ஃபிஷர் பீர்
கிங்ஃபிஷர் பீர்

உயிருக்கு ஆபத்தான கெமிக்கல்கள் கலந்திருப்பதாக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 78,678 கிங்ஃபிஷர் பீர் பாட்டில் பெட்டிகள் கர்நாடகாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பீரை தயாரித்தவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடில் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனம் தயாரித்துள்ள கிங்ஃபிஷர் பீரில் தடை செய்யப்பட்ட, உயிருக்கு ஆபத்தான கெமிக்கல் பொருட்கள் கலந்திருப்பதாக கலால் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கிங்ஃபிஷர் ஸ்ட்ராங், கிங்ஃபிஷர் அல்ட்ரா லெகர் பீர் பாட்டில்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த நிறுவனத்தில் இருந்த பீர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மாதிரியை கெமிக்கல் லேப்பிற்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மைசூரு கலால் துறை துணை ஆணையர் ஏ.ரவிசங்கர் கூறுகையில், "யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனம் தயாரித்த கிங்ஃபிஷர் பீரில் கலந்திருந்த ரசாயனம் குறித்து ஆய்வு செய்தோம். இந்த பீர் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பியதில் அதில் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக ரசாயனம் கலந்திருப்பதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டது.

பீரில் தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் அந்த நிறுவனத்திற்கு விரைந்தனர். ஏற்கெனவே 78,678 பீர் பெட்டிகள் மதுபானக் கிடங்குகளுக்கும், அங்கிருந்து அவை மாவட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிங்ஃபிஷர் பீர்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக வெளியான தகவலை யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் நிர்வாகம் மறுத்துள்ளது. அத்துடன் தாங்கள் அனைத்து தயாரிப்பு வழிகாட்டுதல்களையும் முறையாக கடைபிடிப்பதாகவும், தங்களது தயாரிப்புகள் தரமகாவே தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in