கழிப்பறை டெண்டருக்காக கொல்லப்பட்ட ஆடிட்டர்: இரவில் கும்பலால் நடந்த கொடுமை

கழிப்பறை டெண்டருக்காக கொல்லப்பட்ட ஆடிட்டர்: இரவில் கும்பலால் நடந்த கொடுமை
ஆடிட்டர் மகேஸ்வரன்

தஞ்சாவூரில் கழிப்பறை ஏலம் எடுத்ததற்காக ஆடிட்டர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் பி.மகேஸ்வரன் ( 45). ஆடிட்டரான இவருடைய அலுவலகம் கரந்தை அருகே கொண்டிராஜபாளையத்தில் உள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவரான மகேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் பண்ணை ஒன்றை வைத்துள்ளார். அதில் தென்னை மரங்கள் பயிரிட்டிருப்பதுடன் ஆடு, கோழி ஆகியவற்றையும் வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு மகேஸ்வரன் தனது பண்ணையில் இருந்திருக்கிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மூன்று பேர் அவரிடம் பேச வேண்டும் என்று கூறி உள்ளே வந்திருக்கிறார்கள். அவரை நெருங்கியதும் அவர் எதிர்பாராத நேரத்தில் தங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளார்கள். இதனை சற்றும் எதிர்பாராத மகேஸ்வரன் அலறியபடியே ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பண்ணையை நோக்கி ஓடோடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் கொலையாளிகள், வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். ஆடிட்டர் மகேஸ்வரன் அந்த இடத்திலேயே இறந்தார். தகவல் தெரிந்து வந்த தஞ்சை மேற்கு காவல் துறையினர் மகேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரன் மனைவி நிஷா கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி ஏலத்தில் தனது பண்ணைக்கு எதிரில் இருந்த மாநகராட்சி கழிப்பறையை ஆடிட்டர் மகேஸ்வரன் ஏலம் எடுத்ததாகவும் அதனை விரும்பாத எதிர்தரப்பினர் ஆத்திரமுற்று இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்த சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காவல் துறை மானியக் கோரிக்கையில் தமிழகத்தை கொலை, கொள்ளை இல்லாத மாநிலமாக மாற்றிட முதல்வர் உறுதி கூறிய அன்றைய தினமே தஞ்சையில் கழிப்பறைக்காக இப்படி ஒரு கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.