மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவம்: முகமது ஷாரிக் கையாள் கைது!

முகமது ஷாரிக்
முகமது ஷாரிக்

மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவத்தில் கைதான முகமது ஷாரிக்கின் உதவியாள் என்ற அடிப்படையில் ரூயல்லா என்ற இளைஞரை பெங்களூரு போலீஸார் இன்று கைது செய்தனர்.

மங்களூரு நகரின் குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணை முன்னேற்றம் கண்டுள்ளது. நவ.19 அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக் தீக்காயங்களுடன் கைது செய்யப்பட்டான். அவனது உடலை பாதித்த சுமார் 45% தீக்காயத்தை குணப்படுத்தும் நோக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஷாரிக்கின் தொடர்புகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கும் கர்நாடக போலீஸார், அவன் உள்ளிட்ட சிலர் ஒன்றாக சேர்ந்து குக்கர் வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சிகளில் பல முறை ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஷாரிக்கின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்ததாக, பெங்களூரு நகரில் விநியோக சிப்பந்தியாக பணியாற்றும் ரூயெல்லா என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஷாரிக்கிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெல்லாரியை பின்புலமாக கொண்ட இந்த ரூயெல்லாவை வளைத்தனர். இந்த இளைஞனும் தற்போது மங்களூரு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறான்.

இதனிடையே ஷாரிக் பயன்படுத்திய போலி அடையாளங்களின் அடிப்படையில் புதிய தகவல் ஒன்றையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். அருண்குமார் என்ற இளைஞனின் ஆவணங்கள், அடையாளங்களின் அடிப்படையில் ஷாரிக் புழங்கி வந்ததும், செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் அருண்குமாரின் பர்ஸ் காணாமல் போனதும், சில நாட்கள் கழித்து திரும்ப கிடைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இடைப்பட்ட தினங்களில் அருண்குமார் பர்ஸிலிருந்த ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டு ஷாரிக்கின் புதிய அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது. அருண்குமாரிடம் அவரது தொலைந்த பர்ஸை திரும்பக்கொடுத்த மர்ம நபரை தற்போது போலீஸார் தேடிவருகின்றனர்.

அருண்குமார் என்ற இந்து அடையாளத்துடன் ஷாரிக் செயல்பட்டதை கர்நாடக பாஜகவினர் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளனர். இந்து நபரின் அடையாளத்துடன் நாசகார செயலை நடத்தி, அதன் பழியை இந்து அமைப்புகளின் மீது போட ஷாரிக் திட்டமிட்டிருந்ததாகவும், அதனை உறுதி செய்வதுபோல குக்கர் வெடிப்பு சம்பவத்தின்போது ஷாரிக் காவி துண்டு அணிந்திருந்ததாகவும் பாஜகவினர் புதிய கோணத்தில் குற்றச்சாட்டுகளை தொடுத்து வருகின்றனர்.

ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படும் ஷாரிக், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவான வாசகங்களை பயன்படுத்தியதாக முன்னரே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறான். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மங்களூரு குக்கர் வெடிப்பு சம்பவத்திலும் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ களத்தில் இறங்கியுள்ளது. கோவை - மங்களூரு சம்பவங்கள் இடையிலான தொடர்பு, இதர அமைப்புகளின் உதவிகள், குக்கர் வெடிகுண்டுக்கான பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் என்ஐஏ விசாரணை தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in