
கேரளாவில் மோசடி வழக்கில் கேரள மாநில போலீஸ் ஐ.ஜி. லட்சுமணன் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கில் கைதான பழங்கால பொருட்கள் விற்பனையாளர் மோன்சன் மாவுங்கல்லுடன் இவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
கேரளம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பழங்கால பொருட்கள் விற்பனையாளர் மோன்சன் மாவுங்கல். இவர் பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2021 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மோன்சன் மாவுங்கல், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து விசாரித்த போது, மோன்சன் மாவுங்கல் மோசடியில் போலீஸ் அதிகாரி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் மோன்சன் மாவுங்கல்லுக்கு எதிரான வழக்கு எர்ணாகுளம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் கேரள மாநில போலீஸ் ஐ.ஜி. லட்சுமணன் மீது மோசடி, உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. எனவே, அவர் அந்த மோசடி வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும், மோன்சனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன், டிஐஜி சுரேந்திரன் ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ஐஜி லக்ஷ்மணா நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.