கேரளாவில் போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு; 2 மாவோயிஸ்டுகள் கைது

மாவோயிஸ்டுகள் சந்துரு, உண்ணி மாயா
மாவோயிஸ்டுகள் சந்துரு, உண்ணி மாயா
Updated on
2 min read

கேரள மாநிலம் வயநாடு அருகே போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாவோயிஸ்டுகள் இருவரை கைது செய்துள்ள போலீஸார், தப்பி ஓடிய மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள தலபுழா பகுதியில் நேற்று இரவு கேரள மாநில சிறப்பு போலீஸ் படையினரும், தண்டர்போல்ட் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது 5 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது உண்ணி மாயா மற்றும் சந்துரு ஆகிய 2 மாவோயிஸ்டுகளை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தப்பியோடிய மேலும் 3 பேரை தேடும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரள காடுகளில் மாவோயிஸ்டுகள் (கோப்பு படம்)
கேரள காடுகளில் மாவோயிஸ்டுகள் (கோப்பு படம்)

3 வாரங்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்த துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள், விடுதி மேலாளரின் செல்போனை பறித்து, அதிலிருந்து ஊடகத்தினருக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் கபனி பகுதி குழு, எஸ்டேட் தொழிலாளர்கள் போராட வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர்.

கேரள மாநில தண்டர்போல்ட் போலீஸார்
கேரள மாநில தண்டர்போல்ட் போலீஸார்

இது தொடர்பாக கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்த போது, மாவோயிஸ்டுகள் வயநாடு பகுதியில் தங்கியிருந்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடைபெற்ற இந்த சோதனையின் போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதால், போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில், மாவோயிஸ்டுகள் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in