கேரளா குண்டுவெடிப்பு; அமித்ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு... என்ஐஏ தீவிர விசாரணை!

கேரளா குண்டுவெடிப்பு; அமித்ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு... என்ஐஏ தீவிர விசாரணை!

கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளனர். எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வெடிவிபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வெடிவிபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது சதிச் செயலா? என்ற ரீதியில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். இது தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் குவிந்துள்ளனர். சம்பவம் குறித்து டிஜிபியிடம் பேசியிருக்கிறேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்.

கேரளா வெடிவிபத்து
கேரளா வெடிவிபத்து

அதனைதொடர்ந்து என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்ல அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். குண்டு வெடிப்பு குறித்து உடனடியாக விசாரணையை தொடங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுகாதாரத்துறையை உஷார் படுத்தி உள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், விடுமுறையில் இருக்கும் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக பணியில் இணைய அறிவுறுத்தி உள்ளார். சுகாதாரத்துறை இயக்குநரிடமும், சுகாதாரக் கல்வித் துறைத் தலைவரிடமும் தொலைபேசியில் பேசியுள்ள வீணா ஜார்ஜ், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி, கோட்டயம் மருத்துவக் கல்லூரிகளுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள வீணா ஜார்ஜ், இரண்டிலும் கூடுதல் மருத்துவப் பணியாளர்களை பணியில் அமர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in