3 நாளில் திருமணம்; மாப்பிள்ளை வீட்டில் தூக்கில் தொங்கிய மணப்பெண்: கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு புகார்!

மர்மமான முறையில் இறந்த மணப்பெண் ஐஸ்வர்யா
மர்மமான முறையில் இறந்த மணப்பெண் ஐஸ்வர்யா
Updated on
2 min read

கர்நாடகாவில் திருமணத்திற்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில், மணமகன் வீட்டில் மணப்பெண் தூக்கில் உயிரற்ற நிலையில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தங்கள் பெண்ணை மணமகன் வீட்டார் கொலை செய்து விட்டதாக மணப்பெண்ணின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

மணமகன் அசோக்குமார்
மணமகன் அசோக்குமார்

கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்(27). இதே ஊரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா(26). இவர்கள் இருவரும் ஒன்றாக படித்ததுடன் புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர். அத்துடன் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஐஸ்வர்யா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை திருமணம் செய்ய அசோக்குமார் விரும்பினார்.

ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல, சாதி வேறுபாடு காரணமாக அசோக்குமார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியாது என ஐஸ்வர்யாவிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அசோக்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்து பெற்றோரிடம் சம்மதம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், அசோக்குமாருக்கும், ஐஸ்வர்யாவுக்கும நவ.23-ம் தேதி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஐஸ்வர்யா பங்கேற்றுள்ளார்.

ஐஸ்வர்யாவின் தந்தை சுப்பிரமணி
ஐஸ்வர்யாவின் தந்தை சுப்பிரமணி

இந்த நிலையில் அசோக்குமார் வீட்டில் ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில், நேற்று இறந்து கிடந்ததாக அவரது தந்தை சுப்பிரமணிக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்த அவர் கதறித் துடித்தார். சாதிப் பிரச்சினைக் காரணமாக தனது மகள் கொல்லப்பட்டதாக அவர் புகார் கூறினார்.

ஐஸ்வர்யா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பெற்றோர் உள்பட அவரது குடும்பத்தினர் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று மணமகன் குடும்பத்தினர் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவின் ஆசை நிராசையாகக் கூடாது என்பதற்காக அதை ஏற்ற அவரது பெற்றோர், மணமகன் வீட்டிற்கு அவரது மகளை மட்டும் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்டு ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். சம்பவம் நடைபெற்று இரண்டு மணி நேரம் கழித்தே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஐஸ்வர்யாவின் தந்தை சுப்பிரமணி புகார் கூறினார்.

எனது மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு பலஹீனமானவள் இல்லை என்றார். இச்சம்பவம் குறித்து டி.பி அணை போலீஸில் அவர் புகார் செய்துள்ளார். ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து அசோக்குமாரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மணப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in