கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பேருந்து - வடமாநில இளைஞர் ஓட்டி வந்த சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. சைக்கிளை தூக்கிக் கொண்டு புகார் அளிக்க குளச்சல் காவல் நிலையம் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருந்து நாகர்கோயிலுக்கு தடம் எண் 5N என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. வெட்டுமடை, மண்டைக்காடு பகுதி மேற்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் இந்த அரசு பேருந்து செவ்வாய்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு மேற்கு கடற்கரை சாலை வழியாக நாகர்கோயில் சென்று கொண்டிருந்தது. வெட்டுமடை என்ற பகுதியைக் கடந்து செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வட மாநில தொழிலாளி ஒருவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியது.
இதில் சைக்கிளில் வந்த வட மாநில தொழிலாளி தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தின் போது பல அடி உயரம் மேலே தூக்கி வீசப்பட்ட சைக்கிள் பேருந்தின் முன் பக்கத்தில் விழுந்ததில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் வடமாநில தொழிலாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், அரசு பேருந்தின் டிரைவர் மற்றும் நடத்துனர் சேதமடைந்த சைக்கிளை பேருந்தில் ஏற்றிக் கொண்டு நேராக காவல் நிலையம் சென்று, இருவருமாக சேதமடைந்த சைக்கிளை தூக்கி சுமந்தபடி காவல் நிலையத்திற்குள் புகாரளிக்க சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.