
பஞ்சாபில் கபடி வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டத்திலும் புயலைக் கிளப்பி உள்ளது. பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தாக்கியதன் மூலம் இந்த சம்பவம் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் ஹர்தீப் என்ற கபடி வீரர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம், கபடி வீரரின் உடலை துண்டு துண்டாக்கி அவர் வீட்டின் முன்பாக கொலையாளிகள் எறிந்த பின்னரே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் உபயோகம், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் மறைந்திருக்கும் கேங்ஸ்டர்களால் ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படும் கேங் வார், காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் புதிய எழுச்சி என பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்குக்கு சவாலான பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கி உள்ளன.
அவற்றின் மத்தியில் கபடி வீரர் கொடூரமாக கொல்லப்பட்டதும், அவரது சடலம் துண்டு துண்டுகளாக்கி வீட்டின் முன்பாக எறியப்பட்டதும் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசை சங்கடத்தில் தள்ளியுள்ளது.
இந்த சம்பவத்தை முன்வைத்து பிரதான எதிர்கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கடுமையாக தாக்கியுள்ளார். பஞ்சாபில் ’காட்டாட்சி’ நடப்பதாகவும், முதல்வர் பகவந்த் மான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கபடி வீரர் கொலையான வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் ஆவேசத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.