`வாளையாறு மனோஜை சிறைக்கு அனுப்ப முடியாது; போலீஸ் உதவ வேண்டும்'

சிறைக்கு அனுப்பக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி!
வாளையாறு மனோஜ்
வாளையாறு மனோஜ்

உணவு மற்றும் தங்க வசதியில்லாததால், தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரிய வாளையாறு மனோஜின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகள் மனோஜூக்கு உதவி செய்ய அறிவுறுத்தினார்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையாறு மனோஜ், நிபந்தனை ஜாமீன் வெளியில் உள்ளார். அவரை உதகையில் தங்கியிருந்து, திங்கட்கிழமை தோறும் மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாளையாறு மனோஜ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த 3-ம் தேதி விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. அப்போது, வழக்கு விசாரணை 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வாளையாறு மனோஜின் கோரிக்கைக்கு சட்டத்தில் இடம் இல்லை என கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

இது குறித்து வாளையாறு மனோஜின் வழக்கறிஞர் முனிரத்னம் கூறும்போது, ‘வாளையாறு மனோஜூக்கு சாப்பிடவே வழியில்லாத நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் சிறைக்கு அனுப்ப கோரப்பட்டது. நீதிபதி இதற்கு சட்டத்தில் இடமில்லை என தெரிவித்தார். மேலும், காவல்துறை அதிகாரிகளிடம் மனோஜூக்கு உதவி செய்ய அறிவுறுத்தினார்’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in