ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை ஒட்டி தனியார் துணிக்கடை, நகைக்கடைகள் சார்பில் தள்ளுபடி தருவதாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் வரும் போலி லிங்குகளை க்ளிக் செய்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த லிங்கை க்ளிக் செய்தால் பிரபல நகைக்கடை, துணிக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், இது போன்ற லிங்குகளை தங்கள் நிறுவனம் அனுப்புவதில்லை என தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பரிசு என போலி லிங்குகள் பகிரப்பட்டு வருவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும் இந்த லிங்குகளை தேர்வு செய்து உள்ளே சென்றால் அதன் மூலம் பண மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இது போன்ற லிங்க்குகள் வந்தால் அதனை உள்ளே சென்று பார்ப்பதை விடுத்து, உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது போன்ற மோசடியான லிங்குகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனவும் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறையினரும் தனியார் நிறுவனங்களும் எச்சரித்து வருகின்றனர்.