ஐஐடி மாணவியிடம் அத்துமீறிய ஐஏஎஸ் அதிகாரி...அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!

ஐஐடி மாணவியிடம் அத்துமீறிய ஐஏஎஸ் அதிகாரி...அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமதுவை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி மாணவியின் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் குந்தி மாவட்ட சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக (SDM) பதவி வகித்த சையத் ரியாஸ் அகமது செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை இரண்டு வாரங்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது ஐபிசி பிரிவுகள் 354 , 354A மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் ஜார்க்கண்ட் முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குந்தி மாவட்ட சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டர் இருந்த சையத் ரியாஸ் அகமது மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவு பிறப்பித்துள்ளார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவி உட்பட ஐஐடியின் 8 பொறியியல் மாணவர்கள் பயிற்சிக்காக குந்திக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் துணை வளர்ச்சி ஆணையர் இல்லத்தில் சனிக்கிழமை இரவு விருந்தில் கலந்து கொண்டனர். அந்த விருந்தில் பாதிக்கப்பட்டு மாணவி தனியாக இருந்தபோது, ​​அவரை சையத் ரியாஸ் அகமது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சையத் ரியாஸ் அகமது மற்றும் விருந்தில் கலந்து கொண்ட சில விருந்தினர்களை விசாரணைக்கு உட்படுத்தியது காவல்துறை. விசாரணைக்கு பின்னர் இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளது கண்டறியப்பட்டதால் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in