
காட்பாடி அருகே அடகு கடைகளின் சுவரில் துளைப்போட்டு 60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள சேர்க்காடு கூட்ரோட்டில் மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றார் அனில்குமார். இன்று காலை கடையை திறக்க வந்த அனில்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடகு கடையில் இருந்த 60 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது. இது குறித்து காவல் துறைக்கு அனில் குமார் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்ட கொள்ளையர்கள், அதன் உள்ளே சென்று அடகு கடையின் சுவற்றை உடைத்து உள்ளே இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை தொடர்பாக திருவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.