
சேலம் மலபார் கோல்டு நகைக்கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் கொடுத்த 10 லட்ச ரூபாய் நகையுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜெரினா பேகம் என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நகைக்கடையில் வாங்கிய நகை பழுதானதாக தெரிகிறது. இதையடுத்த அதனைச் சரிசெய்ய அவர் கடைக்கு சென்றிருந்தார்.
கடை ஊழியரான கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (39) என்பவரிடம் தனது 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நகையைக் கொடுத்து பழுதுபார்த்துத் தரக் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் நகையை வாங்க அவர் கடைக்கு சென்றார்.
அப்போது நகையைக் கேட்ட போது, நீங்கள் நகை கொடுத்ததாக புத்தகத்தில் பதிவு இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெரினா பேகம், நகைக்கடை உதவி மேலாளர் சந்திரசேகரனிடம் கூறியுள்ளார். அவர் கடை ஊழியர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்தார்.
அப்போது, ஊழியர் கார்த்திக் இரண்டு மூன்று நாட்களாக கடைக்கு வராதது தெரியவந்தது. மேலும், ஜெரினா பேகத்திடம் இருந்து அவர் நகையை வாங்கியதும், பின்னர் வரவு வைக்காமல் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
கார்த்திக்கை தேடி வீட்டிற்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. மொபைல் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் மீது அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.