செய்கூலி இல்லை, சேதாரமில்லை... ஆசைவலை வீசி 100 கோடி சுருட்டல்... நகைக்கடை மீது குவியும் புகார்!

பிரணவ் ஜூவல்லர்ஸ்
பிரணவ் ஜூவல்லர்ஸ்

செய்கூலி இல்லை, சேதாரமில்லை என்று விளம்பரப்படுத்தி, 100 கோடி ரூபாய் , மோசடி செய்துள்ளதாக பிரபலமான பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட 9 இடங்களில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. 0 சதவீத செய்கூலி, சேதாரம் இல்லை என கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்தனர்.

மாதம் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் 10 மாத முடிவில் போனஸ் தொகையுடன் வரும் தொகையைக் கொண்டு செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கலாம். அதே போல குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்தால் ஒரு வருடம் கழித்து அதற்கான வட்டியுடன் சேர்த்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கலாம் என்று இந்த நிறுவனம் கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்தது.

பழைய நகைகளை மாற்றுவதற்கு நகைகளைக் கொடுத்தால் அதற்குப் பத்திரம் போட்டு தருவார்கள். பத்து மாதம் கழித்து பழைய நகைக்கு மாற்றான புதிய நகைகளை வாங்கலாம் என்றும், ஒரு  கவர்ச்சிகரமான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஏராளமான மக்கள் அந்த கடையில் முதலீடு செய்துள்ளனர். 

மூன்றாண்டுகளாக செயல்பட்டு வரும் அந்த கடையில் முதல் இரண்டு ஆண்டுகள் அவர்கள் அறிவித்தப்படியே நகைகள் தந்துள்ளனர். ஆனால், சென்ற வாரம் நகைச்சீட்டு முடிந்தவர்கள் கடைக்குச் சென்று கேட்டபோது ஒரு வாரம், ஒரு மாதம் கழித்து வாருங்கள் எனக்கூறி அனுப்பி உள்ளனர். சிலருக்கு காசோலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பணமில்லாத காரணத்தால் அவை திரும்பி வந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் தரப்படும் என்று நகைக்கடை சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனிடையே திருச்சி கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் மாலை  திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் கடையில் சென்று கேட்டுள்ளனர். அவர்களுக்கு  சரியான பதில் கிடைக்கவில்லை. 

அதனால் மீண்டும் நேற்று அவர்கள் வந்து பார்த்தபோது கடை மூடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கலைந்து போகச்செய்து இது குறித்து மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் இந்த நகைக்கடையில் சுமார் 100 கோடி மேல் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in