சிறையிலிருந்து வெளியே வருகிறார் ஜெயக்குமார்

3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்டது
சிறையிலிருந்து வெளியே வருகிறார் ஜெயக்குமார்

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீன்வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதால் சிறையில் இருந்து ஜெயக்குமார் வெளியே வருகிறார்.

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது. இந்நிலையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஜெயக்குமாரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை மார்ச் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், தனது மருமகன் நவீன்குமாகும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத என்னை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளாதால், ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதேசமயம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கடந்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதால் சரியாக விசாரிக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்றும் எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். புகார்தாரர் தரப்பிலும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு, திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அங்கு உள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in