
கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த கரூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போல் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் சேர்மன் சக்திவேல் இல்லத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. 3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள், 4 குழுக்களாக பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.