`கோ' படத் தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு

`கோ' படத் தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு
எல்ரெட் குமார்

சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பைனான்சியர்கள், குவாரி, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான அதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, ராணிப்பேட்டை, உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட இடங்களில் 250க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோ, விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தயாரிப்பாளரும், `முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் இயக்குநருமான எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய இடங்களை மையப்படுத்தி இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. எல்ரெட் குமார் கட்டுமான தொழில், குவாரி தொழில் என 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். இவருக்கு சொந்தமான தி.நகர் ராஜா தெருவில் உள்ள EK infra என்ற கட்டுமான நிறுவனம், பகவானந்தம் தெருவில் உள்ள RS infotainment சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சுப்பையா தெருவில் பைனான்சியர் சுரேஷ் லால்வானி என்பவரது வீட்டிலும், வேப்பேரி ஜெர்மையா சாலையில் எல்ரெட் குமார் மற்றும் மங்கல்சந்த் துகார், நடத்தி வரும் கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் மற்றும் மகாவீர் காலனியில் இதே நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கரணி பகுதியில் எல்ரெட் குமாரின் உதவியாளர் கந்தசாமி வீட்டிலும், ஆலந்தூரில் உள்ள டி.ஜே மினரல்ஸ் என்ற தாதுமணல் அலுவலகத்திலும், செங்கல்பட்டு எருமையூர் பகுதியில் உள்ள கல்குவாரியிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.

இது தவிர ராணிப்பேட்டை ஆற்காடு பகுதியை சேர்ந்த குவாரி உரிமையாளரும், திமுக உறுப்பினரான ஏ.வி.சாரதி என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்குவாரி, உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.