அணையில் மூழ்கி பொறியாளர் பலி: நண்பரின் திருமணத்திற்கு வந்த இடத்தில் சோகம்!

காமராஜர் அணையில் ராம்குமாரை தேடும் தீயணைப்புத்துறை.
காமராஜர் அணையில் ராம்குமாரை தேடும் தீயணைப்புத்துறை.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த வாலிபர், காமராஜர் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், அத்திக்கல் பகுதியில் காமராஜர் அணை அமைந்துள்ளது. இதே பகுதியில் இன்று திருமணம் ஒன்று நடைபெற்று உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நாமக்கல்லைச் சேர்ந்த ஐ.டி பொறியாளர் ராம்குமார் (28) என்பவர் உட்பட நண்பர்கள் சிலர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர். திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் நண்பர்கள் அனைவரும் காமராஜர் அணையைச் சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய ராம்குமார்  உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
நீரில் மூழ்கிய ராம்குமார் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்

அப்போது நீர் ததும்பி நிற்கும் காமராஜர் அணையில் குளிக்க இளைஞர்கள் முடிவு செய்தனர். ராம்குமார் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நீந்தி சென்று விட்டு மீண்டும் திரும்ப மறுகரைக்கு வந்து கொண்டிருந்தார். காமராஜர் அணையில் தண்ணீர் மிகுந்த குளிர்ச்சியோடு இருந்ததால், நீந்த முடியாமல் தவித்த ராம்குமார், தண்ணீரில் மூழ்கினார்.

அவருடன் சென்ற நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் கரையில் நின்றபடி பதறினர். இதனால் அவரைக் காப்பாற்ற முடியாததால் ராம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த ஐ.டி பொறியாளர் ராம்குமார்
உயிரிழந்த ஐ.டி பொறியாளர் ராம்குமார்

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ராம்குமாரின் சடலத்தை அணையில் இருந்து மீட்டனர். புதுமந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராம்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சிக்காக வந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in