
கோவையில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புள்ள இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதன் அருகில் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மார்ட்டின் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகத்திலும், அவரது உறவினர்களின் வீடுகளிலும் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை, மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஏற்கெனவே மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.