சொத்துக்களைச் சுருட்ட நித்யானந்தாவுக்கு விஷம்?

விடை தெரியாத கேள்விகளால் விலகாத மர்மங்கள்!
நித்யானந்தா
நித்யானந்தா

சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக
இருப்பவர்களில் நித்யானந்தாவும் ஒருவர். சிவன் போல வேடமிட்டு ஸ்பெஷல் எஃபெக்ட்டுகளுடன் நித்தமும் நித்தி வெளியிடும் வீடியோக்கள் அவரது பெண் பக்தர்கள் மத்தியில் பிரபலம். ஆனால், அந்த வீடியோக்கள் மீம்ஸ் மன்னர்களிடம் சிக்கி சின்னாபின்னமாவது தனிக்கதை. இதைப் பற்றியெல்லாம் நித்யானந்தா பெரிதாக கவலைப்படமாட்டார். அடுத்த வீடியோவிற்குப் போய் விடுவார்!

இந்த நிலையில், நித்யானந்தா இறந்து விட்டதாக அண்மையில் சமூக வலைதளங்களில் செய்து பரவியது. ஆனால் ரஜினியின், ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்ற டயலாக்கை கைப்பட கடிதத்தில் எழுதி, அவருக்கு எண்ட் கார்டு போட நினைத்தவர் களுக்கு ஷாக் கொடுத்தார் நித்யானந்தா.

“நான் இறந்துவிட்டதாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. எனக்குப் பேசவோ சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். எனக்கு எந்த நோயும் இல்லை. 28 நாள்கள் பத்னி விரதம் செய்தேன். நான் இறந்து விட்டதாக சில வெறுப்பாளர்கள் பொய்யும் புரட்டும் செய்ய முயல்கிறார்கள்” என்று நித்யானந்தா சமூக ஊடகம் மூலம் நீண்ட விளக்கமும் அளித்தார்.

“அப்பாடா “ என நித்தியின் பக்தர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு இரண்டு நாட்களாகவில்லை. “எனக்கு இந்த உலகில் வாழ ஆசை இல்லை” என மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சி குண்டை வீசினார் தலைவர்.

“எனது வாழ்வில் நான் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்து முடித்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, உங்களைப் போலவே நானும் பரமசிவன் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் உணவு எதையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. வாயில் உணவை வைத்தால் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுக்கிறது. உறக்கம் முற்றிலுமாக இல்லை. 24 மணி நேரமும் எனது மூளை விழித்துக் கொண்டிருக்கிறது. எனது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, எனது வாழ்க்கை மற்றும் நான் செய்த வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளேன்” என்று பதிவிட்டார். இதைப் பார்த்துவிட்டு பரமஹம்சருக்கு என்ன தான் ஆச்சு என அவரது பக்தர்கள் புலம்ப ஆரம்பித்தனர்.

சர்ச்சைகள் மூலம் தன்னை எப்போதும் லைம்லைட்டில் வைத்திருப்பவர் நித்யானந்தா. நடிகை ரஞ்சிதா வீடியோ தொடங்கி இதுதான் நடந்து வருகிறது. அந்த அமளி அடங்கியும் அடங்காமலும் இருந்த நிலையிலேயே மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக 2012-ம் ஆண்டு நித்யானந்தா நியமிக்கப்பட்டார். ஒருகட்டத்தில், அவரை ஆதீனமாக நியமித்த மதுரை ஆதீனமே,' நித்யானந்தாவால் தன் உயிருக்கு ஆபத்து' என்று நீதிமன்றத்தை நாடினார். சிறுமிகள் மாயம், பாலியல் வழக்குகள் என நித்தியின் நித்திரையைப் பறித்த புகார்கள் ஏராளம்.

பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகள் துரத்தியதால் இந்தியாவை விட்டு வெளியேறிய நித்யானந்தா, ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி 'கைலாசா நாடு' என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிரடி கிளப்பினார். கைலாசாவுக்கு தனி கொடி, தனி ரூபாய் நோட்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை நித்யானந்தா வெளியிட்டிருப்பதாக வெளியான செய்திகளை நம்புவதா வேண்டாமா என பலரும் குழம்பிப் போனார்கள். இதனிடையே, கைலாசா அட்மாஸ்பியரில் நித்யானந்தா வெளியிட்ட கலர்ஃபுல் படங்களைப் பார்த்துவிட்டு பலபேர் கைலாசாவுக்குப் போகும் வழிகளை சீரியஸாகவே விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படியெல்லாம் ஜபர்தஸ்து காட்டிய நித்யானந்தா உடல் வற்றிப் போய் சோர்வான நிலையில் தோற்றமளிக்கும் போட்டோக் களையும் வீடியோக்களையும் பார்த்துவிட்டு பலபேர் வாயடைத்துப் போனார்கள். “இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை” என்று அவர் வெளியிட்ட கருத்தைக் கேட்டு அவரது பக்தர்கள் அரண்டுபோய்க் கிடக்கிறார்கள்.

சோலை கண்ணன்.
சோலை கண்ணன்.

இதுகுறித்து நித்யானந்தாவை ஆதரிக்கும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணனிடம் பேசினோம். “பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தின் சொத்துக்களை அடைய நித்யானந்தாவிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இந்த ஆசிரமத்தின் சொத்துக்களைக் கைப்பற்ற நடிகை ரஞ்சிதா முயற்சி செய்கிறார். இதனால் நித்யானந்தாவின் மூத்த சீடர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி விட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் போற்றக்கூடிய நித்யானந்தாவைப் பாதுகாக்க வேண்டும். எனவே, அவர் உடல் நலன் எந்த நிலையில் உள்ளது என்பதை போலீஸார் கண்டறிந்து உலகுக்குச் சொல்ல வேண்டும். நித்யானந்தா வெளியிடும் வீடியோக்களை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என இலகுவாக போலீஸார் கண்டு பிடித்து விடலாம். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டியது போலீஸாரின் கடமை" என்றார் அவர்.

மூடிக்கிடக்கும் மதுரை கைலாசா.
மூடிக்கிடக்கும் மதுரை கைலாசா.

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததை மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் சட்டப்படி ரத்து செய்துவிட்டாலும் நித்யானந்தா மதுரைக்கும் தனக்குமான உறவை அறுத்துக்கொள்ள வில்லை. அம்மன் சன்னிதியிலேயே கைலாசா என்ற ஆசிரமம் உருவாக்கப்பட்டு அது நித்தியின் சீடர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் சீடர்களுக்கு ஏதாவது விவரம் தெரிகிறதா என்று விசாரிப்பதற்காக அங்கு சென்றோம். மதுரை கைலாசா பூட்டிக் கிடந்தது. பூட்டிய கிரில் கதவுக்குள் இருந்தபடியே நம்மிடம் பேசிய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பசவராஜூ, "நான் கடந்த 16 ஆண்டுகளாக நித்யானந்தாவுடன் இருக்கிறேன். அவர் சமாதி நிலையில் இருப்பதால் உடல் சோர்வாக தெரிகிறது. அவருக்குள் இருக்கும் சக்தி அவரை உடனடியாக பலம் பெற வைத்து விடும். எனவே, அவர் உடல் நலன் நல்லமுறையில் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று சொன்னார்.

பசவராஜூ
பசவராஜூ

நித்யானந்தாவின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், பணத்தட்டுப்பாட்டில் நித்யானந்தா இருப்பதாகவும் சொல்கிறார்களே என்று அவரிடம் கேட்டதற்கு, "இந்திய பணக்காரர்களில் நித்யானந்தாவும் ஒருவர். எனவே, அவர் பணத்தட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுவது நகைப்புக்குரியது. பக்தர்கள் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று இன்று கூட அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிடதி சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சிப்பவர்கள் உண்மையான பக்தர்களாக இருக்க முடியாது" என்றார் பசவராஜூ.

இத்தனை நாளும் மற்றவர்கள் தான் நித்யானந்தாவால் தங்களுக்கு ஆபத்து என புகார்களை அடுக்கிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது, நித்யானந்தாவுக்கே ஆபத்து என அவரின் நலன் விரும்பிகள் சந்தேகம் கிளப்புகிறார்கள். இன்னும் சிலர், அவருக்கு வரக்கூடாத நோய் வந்துவிட்டதாக வரிந்து கட்டுகிறார்கள். உண்மை என்னவென்பது அந்த கைலாசநாதருக்கே வெளிச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in