பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சித் தலைவரின் தில்லாலங்கடி அம்பலம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் வீடுகட்ட 2.25 லட்சம், 1.70 லட்சம் என பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த நிதியை வீடே கட்டாத பெண்ணின் பெயரில் வரவு வைத்து, ஊராட்சியே கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தைச் சேர்ந்தவர் சீரங்கம்மாள்.இவரது மகன் மணிகண்டன். இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேலை நிமித்தமாக திருச்சியில் வசித்து வருகிறார். இவர் லாடபுரத்தில் சொந்தமாக வீடுகட்ட அரசிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு வீடுகட்ட பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அலார்ட் ஆகியிருப்பதாகவும், அதற்காக அரசு வழங்கும் 1.70 லட்சம் ரூபாய் அவரது தாயார் சீரங்கம்மாளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் மெசேஜ் வந்தது.

இந்நிலையில் லாடபுரம் ஊராட்சிமன்றத் தலைவர், அவரது கணவர் உள்ளிட்டோர் சீரங்கம்மாளை வங்கிக்கு அழைத்துச் சென்று, ஊராட்சி நிதி தவறுதலாக அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதாக பணத்தை எடுத்துள்ளனர். இதில் 1.70 லட்சம் மட்டுமல்லாது, சீரங்கம்மாளின் வங்கிக் கணக்கில் இருந்த 7 ஆயிரம் ரூபாயையும் சேர்த்தே எடுத்துள்ளனர். சீரங்கம்மாளின் மகன் மணிகண்டன் இதைப் பற்றித் தெரிந்ததும் அதிர்ந்து போனார். அவர் இதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் கேட்டபோதும் உரிய பதில் இல்லை. அவரது தாயிடம் இருந்து எடுத்த 7 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கேட்டபோதும் கொடுக்கவில்லை.

இதுகுறித்து ஆட்சியருக்கு புகார் கொடுத்தார் மணிகண்டன். புகாரின் பேரில் விசாரணை நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார். அறிவழகன் நடத்திய விசாரணையில், லாடபுரம் ஊராட்சியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டாமலேயே கட்டியதாக நிதிக் கையாடல் நடந்தது உறுதியானது. இருந்தும், இதேபோல் வேறு யாரிடமும் முறைகேடு நடந்துள்ளதா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in