சாலையில் கிடந்த இரும்பு லாக்கர்: உள்ளே இருந்த பொருளால் போலீஸார் அதிர்ச்சி

சாலையில் கிடந்த இரும்பு லாக்கர்: உள்ளே இருந்த பொருளால் போலீஸார் அதிர்ச்சி

சென்னை ஓஎம்ஆர் சாலையில் கிடந்த இரும்பு லாக்கரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் ராஜீவ்நகர் சிக்னல் அருகே சாலையில் மர்ம பெட்டி ஒன்று கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த கண்ணகிநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ்(30) சாலையில் மர்ம பெட்டி கிடந்ததைப் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்த கண்ணகி நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அதில் வெடிபொருள் உள்ளதா என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலஷ்மி முன்பாக சோதனை செய்தனர். அந்த பெட்டியில் வெடிபொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு பெட்டியைத் திறந்து பார்த்தனர். அதனுள் இரும்பு லாக்கர் ஓன்று இருந்ததைக் கண்டனர். பின்னர் இரும்பு லாக்கரை உடைத்து பார்த்த போது 35 கட்டு வெள்ளை தாள்களும், 3 இங்க் பாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. மர்மப்பெட்டியில் இருந்த வெள்ளை காகிதம் மற்றும் மை பாட்டில்கள் கள்ள நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கண்ணகி நகர் போலீஸார் பெட்டியைப் பறிமுதல் செய்ததுடன் பெட்டியைச் சாலையில் வீசிச் சென்ற நபர் யார், கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்புடையவரா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in