பெண்களை குறிவைத்த ஈரான் கொள்ளையர்கள்: ஸ்கெட்ச் போட்டு தூக்கியது சேலம் போலீஸ்!

பெண்களை குறிவைத்த ஈரான் கொள்ளையர்கள்: ஸ்கெட்ச் போட்டு தூக்கியது சேலம் போலீஸ்!

சேலத்தில் பெண்களை குறிவைத்து நகைபறிப்பில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் செவ்வாய்பேட்டை மூங்கப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. கடந்த 10-ம் தேதி நடந்து சென்ற இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை இருவர் பறித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் செவ்வாய் பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிப்(23), ஷபிஷேக்(30) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் சேலம் மாநகரில் கடந்த 3 ஆண்டுகளில் சூரமங்கலம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் பெண்களிடம் 25 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இருசக்கர வாகனங்களையும் திருடிச் சென்றுள்ளனர். இவர்கள் மீது சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரின் பூர்வீகம் ஈரான் என்பதும், அங்கிருந்து ஒரு குழுவாக பிரிந்து கர்நாடக மாநிலம் வந்து பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களைக் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி காவல்துறை ஆணையர் நஜ்முல் ஹோடாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இதற்கான ஆணை சிறையில் உள்ள 2 வழிப்பறி கொள்ளையர்களிடம் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.