
பீகாரில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் ஆய்வாளர் டிராக்டரை ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் பிரபாத் ரஞ்சன் உள்ளிட்ட போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் நேற்று சென்றனர். கர்ஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மணலை டிராக்டர்களில் கடத்திக் கொண்டிருந்தது.
அங்கு சென்ற காவல் ஆய்வாளர் பிரபாத் ரஞ்சன், மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய முயன்றார். அப்போது டிராக்டரை வைத்து காவல் ஆய்வாளர் மீது மோதினர். இதில் காவல் ஆய்வாளர் பிரபாத் ரஞ்சன், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சாவ் ஆகியோர் மீது டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.
இவர்களை உடனடியாக போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளர் பிரபாத் ரஞ்சன் உயிரிழநத்ர். ராஜேஷ்குமார் சாவ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல ஒரு சம்பவம், நவம்பர் 1-ம் தேதி அவுரங்காபாத் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை போலீஸார் தடுத்தனர். இதில் டிராக்டர் மோதி ஊர்க்காவல் படை காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்ததாக தற்போது காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து கர்ஹி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். அத்துடன் டிராக்டர் ஓட்டுநரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " பாட்னா, போஜ்பூர், ரோஹ்தாஸ், அவுரங்காபாத், சரண் மற்றும் வைஷாலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காவலர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் குறிவைத்து மணல் மாஃபியாக்கள் நடத்தும் வன்முறை தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் சட்ட ஒழுங்கிற்கு சவால் விடுவதாக உள்ளது" என்று கூறினார்.
மணல் கடத்தலைத் தடுத்த காவல் ஆய்வாளர் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.