ஐஐடி மாணவி, விக்னேஷ் வழக்கு: போலீஸ் கமிஷனரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

ஐஐடி மாணவி, விக்னேஷ் வழக்கு: போலீஸ் கமிஷனரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

ஐஐடியில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹெல்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. காவல் ஆணையர், உயர் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்கள்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹெல்டர் தலைமையில் சென்னை ஐஐடி மாணவி வழக்கு மற்றும் விக்னேஷ் மரணம் தொடர்பாக விசாரணை தொடங்கியது. அப்போது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் கண்ணன், மாநில மனித உரிமை துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் விசாரணைக்காக ஆணையத்தில் ஆஜராகினர்.

இதில், விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்தது தொடர்பாக காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மரணத்திற்கு பிறகு காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை சென்னை காவல் ஆணையர் ஆணையத்தில் சமர்பித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகாரில் எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் உறவினர்கள், ஆட்டோ ஓட்டுநர் பிரபுவிடம் விசாரணை நடைபெற்றது.

இது குறித்து காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கூறுகையில், "விசாரணை ஆணையம் நேரடியாக முறையான விசாரணை நடத்தியது. புழல் சிறையில் உள்ள சுரேஷின் தாயாரிடம் விசாரணை நடைபெற்றது. விக்னேஷ் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்தான் என்று சான்றிதழை தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திடம் ஒப்படைத்தோம்.

விக்னேஷ் உடன் சுரேஷ் என்பவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். சுரேஷின் சாதி சான்றிதழையும் விசாரணையின் போது கேட்கப்பட்டது. தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திடம் அதையும் நாங்கள் ஒப்படைத்து விட்டோம். காவல்துறையினர் தொடர்ந்து சுரேஷ் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு போலீஸுக்கு மட்டும் சுரேஷ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரா என்ற சந்தேகம் உள்ளது. சுரேஷ் குடும்பத்தினருக்கு வீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கின்றோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in