
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை வார்டன்கள் பலத்த காயமடைந்தனர்.
கோவை மத்திய சிறையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சிறை வளாகத்தில் சில கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மோதலாக மாறிய நிலையில் கைதிகள் தாக்கியதில் 4 சிறைவார்டன்கள் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்த சிறைக்காவலர்கள் ராகுல், மோகன்ராம், பாபுஜான், விமல்ராஜ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறைவளாகத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்ட கைதிகள் கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை சமரசப்படுத்திய சிறைக் காவலர்கள், சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த மோதல் சம்பவம் காரணமாக சிறை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.