சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளிக்கு, 18 ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடிகளை தண்டனையாக வழங்கி சிங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மார்க் கலைவண்ணன் தமிழரசன் என்பவருக்கு 44 வயதாகிறது. பாலியல் பலாத்காரம் வழக்கொன்றில் சிக்கி 16 ஆண்டுகள் சிறையிலிருந்த இவர், வெளியில் வந்த பிறகும் அடங்கியபாடில்லை. போதை ஏற்றிக்கொண்டு வீடுகள் தேடி இவர் நடத்திய அட்டூழியங்கள் அங்கே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு இதர தேசங்களைவிட கடுமையான தண்டனைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன. போதை முதல் பாலியல் குற்றங்கள் வரை சிங்கப்பூரின் சட்டம் அதிரடி காட்டுவது வழக்கம். அந்த வகையில் கலைவண்ணன் இழைத்த குற்றங்களுக்கு, 18 ஆண்டுகள் தடுப்புக்காவல் சிறையுடன், 12 கசையடிகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போதையில் கலைவண்ணன் நிகழ்த்திய கேடுகள் அவருக்கான கசையடியை தீர்மானித்திருக்கின்றன. தெருவில் கடக்கும் போது, அப்பகுதியில் இருக்கும் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்து, அங்கிருக்கும் பெண்களிடம் பாலியல் அக்கிரமங்களை நடத்திவிட்டு தப்பியோடி விடுவது கலைவண்ணன் பாணி.
அப்படியொரு முறை வீடு ஒன்றினுள் நுழைந்து அங்கிருந்த பணிப்பெண்ணிடம் வரம்பு மீறியதில், கலைவண்ணன் வசமாக பிடிபட்டார். இவை தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கலைவண்ணனின் குற்ற ஜாதகம் அலசி ஆராயப்பட்டு, தீர்ப்பு எழுதப்பட்டது. 18 ஆண்டு சிறைத் தண்டனையைவிட, 12 கசையடிகள் உக்கிரமானவை என்பதால், அவற்றின் நிறைவேற்றம் தொடர்பாக சிங்கை ஊடகங்கள் சிலாகித்து வருகின்றன.
கசையடி முதல் கழுவேற்றம் வரை ஆதிகாலத்து தண்டனைகள் பலவும், அவை வழக்கில் இருந்த நாடுகளால் நீக்கப்பட்டுள்ளன. ஆன போதும், சட்டம் ஒழுங்கை திடமாக நிலை நிறுத்தும் நோக்கில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் கசையடி போன்ற தண்டனைகள் இன்னமும் வழக்கில் நீடிக்கின்றன.