இங்கிலாந்தில் இந்தியப் பெண்ணைக் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள தெற்கு லண்டனில் குராய்டனில் வசித்து வந்தவர் மேஹக் ஷர்மா(19). இந்தியாவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் தான் இங்கிலாந்திற்கு இவர் சென்றுள்ளார்.
இந்த நிலையில், குராய்டனில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்தார். அவரை மீட்ட போலீஸார், மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மேஹக் ஷர்மாவை கொலை செய்ததாக அவரது நண்பரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷைல் ஷர்மா(23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் அவரை விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளனர்.
இக்கொலை குறித்து தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய சிறப்பு பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெருநகர போலீஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் சசிகுமார்(38) காயங்களுடன் கேம்பர்வெல்லில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில், சசிகுமார் மார்பில் கத்தியால் குத்தப்பட்டதால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. வடக்கு லண்டனில் உள்ள வெம்ப்லியில் இந்திய மாணவி தேஜஸ்வினி கொந்தம்(23) அவரது நண்பர் கெவின் அந்தோணியா லாரன்ஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். லண்டனில் இந்தியர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.