தமிழகத்தில் சட்டம் ‘ஒழுங்கு’ இருக்கிறதா?

அதிகரிக்கும் காவல்நிலைய மரணங்கள் எழுப்பும் கேள்வி!
தமிழகத்தில் சட்டம் ‘ஒழுங்கு’ இருக்கிறதா?

முறையற்ற உறவு காரணமாக, 11 மாதக் குழந்தையை விட்டு விட்டு கள்ளக் காதலனுடன் தலைமறைவாகிறார் அந்த இளம் பெண். தனது மனைவி காணவில்லையென போலீசில் புகார் கொடுக்கிறார் அவரது கணவர். இதையடுத்து, ஊரை விட்டு ஓடிப்போன அந்த ஜோடியை போலீஸார் விசாரணைக்கு அழைக்கின்றனர். அப்படி விசாரணைக்கு வந்த இளம் பெண்ணும், வாலிபரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே மயங்கி விழுகின்றனர். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. போலீஸ் விசாரணைக்குப் பயந்து ஸ்டேஷனுக்கு வரும் முன்பே இருவரும் விஷம் குடித்துவிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த வாரம் பென்னாகரத்தில் நடந்த நிகழ்வு இது.

காவல் நிலைய விசாரணைக்கு அழைக்கப்பட்டதாலே பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால், சந்தேக வழக்குகளிலோ, திருட்டு வழக்குகளிலோ சிக்குபவர்கள் எந்த அளவிற்கு போலீஸாரின் 'விசாரணைக்கு' உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இயல்பாகவே ஏற்படுகிறது.

உலுக்கிய இரட்டைக்கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் செய்த தவறு என்ன தெரியுமா? கரோனா ஊரடங்கில் கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்திருந்தனர் என்பது மட்டும் தான்.

இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளரான ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தன்னைத் தவிர்த்து மற்ற 8 பேருமே இந்த இரட்டைக் கொலையை செய்ததாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு, முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அண்மையில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அன்று பேசியது என்ன?

சாத்தான்குளம் இரட்டைக் கொலை நடந்த போது எதிர்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சுகள் இப்போதும் நினைவில் வருகிறது. “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'லாக்-அப்' மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன. எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும்" என்று அன்று ஸ்டாலின் பேசினார்.

அன்றைக்கு, முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி கேட்ட ஸ்டாலினின் ஆட்சியில் அதே போல காவல் நிலைய மரணங்கள் தொடர்கிறதே, இதற்கு யார் பதில் சொல்வது என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

விக்னேஷ்
விக்னேஷ்

13 இடங்களில் காயம்

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் ஏப்ரல் 18-ம் தேதி தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து வழக்கு ஒன்றுக்காக விசாரணை செய்யப்படுகிறார். 19-ம் தேதி அவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். விக்னேஷ் வலிப்பு வந்து உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் தாக்கியதால் தான் விக்னேஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், காவல்துறையினர் விக்னேஷை துரத்திச் சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விக்னேஷ் வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரிக்கிறது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அத்துடன் விக்னேஷ் தலையில் 1 செ.மீ அளவுக்கு ஆழமான காயம் உள்ளதாகவும் போலீஸ் லத்தி அல்லது கம்பால் தாக்கியதால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல் பின்பற்றப்படுகிறதா?

ஒருவரை கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகத்தில் செல்லுபடியாவதில்லை என்று சமூக உரிமை தளத்தில் செயல்படுபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் நடந்த காவல் மரணங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் அச்சமாக இருக்கிறது என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சத்தியவான், லாட்டரி விற்றதாக கைது செய்யப்பட்ட சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் கார்த்திக், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா நீர்கோழியந்தலை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுலைமான், திருவண்ணாமலை மாவட்டம் தட்டாரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி, சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சீனிவாசன், சென்னை பட்டினப்பாக்கம் விக்னேஷ் என போலீஸ் கஸ்டடியில் இறந்தவர்களின் பட்டியல் நீள்கிறது.

உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

இதன் தொடர்ச்சியாக, காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது," காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது" என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அத்துடன், "காவல் நிலைய துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது" என்றும் எச்சரித்தது.

இந்த நிலையில், "தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் குறிப்பாக, காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது" என்றும் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?

"காவலர்கள் தங்களின் உடல்நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், அவர்கள் குடும்பத்தினருடன் போதிய நேரத்தைச் செலவிடுவதற்காகவும் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகிறது" என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட போது, போலீஸார் குடும்பங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தன.

ஆனால், இந்த விடுப்பு ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே முறையாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான காவலர் பணியிடம் நிரப்பப்படாததால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையும், உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தழும் காவல் நிலைய மரணங்களுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் தான் நாங்கள் பணிபுரிகிறோம். வழக்குகளில் அரசியல் தலையீடு துவங்கி ஓய்வு இல்லாத பணி நிலையும் பலருக்கு மாரடைப்பையும், தற்கொலை எண்ணத்தையும் கொண்டு வந்து விடுகிறது. 2021-ம் ஆண்டில் மட்டும் மாரடைப்பால் 58 பேர் காவல்துறையில் இறந்துள்ளனர். 69 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்கின்றனர்.

இ.ஆசீர்
இ.ஆசீர்

இது தொடர்பாக காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர் நம்மிடம் பேசுகையில், "இந்தியாவில் சித்ரவதைக்கு எதிரான சட்டங்கள் பிரத்யேகமாக இல்லை. ஐ.நா கொண்டு வந்த இது தொடர்பான உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டது. ஆனால், அதை உறுதியேற்பு செய்யவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் இந்த சட்டம் அமலாகவில்லை. காவல் நிலைய மரணங்கள் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமே, காவல்துறையில் இருப்பவர்களுக்கு போதுமான மனித உரிமை கல்வி அளிக்கப்படாதது தான். முதலில் அந்த கல்வி அனைத்து காவலர்களுக்கும் போதிக்கப்பட வேண்டும்.

காவல்துறையினரால் நிகழும் இது போன்ற மரணங்கள் மீது மாநில மனித உரிமை ஆணையம் உரிய தலையீடு செய்ய வேண்டும். ஆனால், அதன் தலைவராக மீனாகுமாரி பொறுப்பில் இருந்த 5 ஆண்டுகளில் 3 வழக்குகளின் தான் தீர்ப்பு கிடைத்தது. 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஆணையத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அரசியல் பின்புலத்துடன் இருப்பதன் காரணமாக அது செயல்படாத ஆணையமாகவே உள்ளது. அது ஒரு சுதந்திரமான அமைப்பாக, மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

அத்துடன் காவல்துறையில் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது. காவல்துறையின் ஒட்டு மொத்த பொறுப்பையும் முதல்வர் ஸ்டாலின், தமிழக காவல்துறை தலைவர் கையில் கொடுத்துள்ளது மிகப்பெரிய தவறு. அது முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஏனெனில், காவல்துறையில் நடக்கும் குற்றங்களுக்கு அதிகாரிகள் மட்டுமல்ல... அரசும் பொறுப்பேற்க வேண்டும். அந்த பொறுப்பில் இருந்து முதல்வர் நழுவக் கூடாது" என்று அவர் கூறினார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.

காவல்நிலைய மரணங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தமானிடம் பேசினோம். “நாகரிக சமூகத்தில் காவல் நிலைய மரணங்கள் நடக்கவே கூடாது. மேற்குல நாடுகளில் இப்படியான வன்முறைகள் அரங்கேறுவதில்லை. ஆனால், இந்தியாவில் சர்வ சாதாரணமாக இப்படியான மரணங்கள் தொடர்ந்து நடக்கிறது. காவல்நிலைய மரணங்கள் குறித்த விசாரணையை சிபிசிஐடி, சிபிஐ நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுகிறது. உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரித்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் கருதுகிறார்கள். அந்த உணர்வு சரியானது தான். ஆனால், காவல் நிலைய மரணங்கள், என்கவுன்ட்டர் கொலைகள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றங்கள் தேவை. அப்படிச் செய்தால் இப்படியான வழக்குகளை விரைவுபடுத்த முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க உதவி செய்யும்" என்று சொன்னார் ஹரிபரந்தாமன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது எதையும் எளிதில் பேசிவிடலாம். ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் போது அப்படி எல்லாம் பேசிவிடமுடியாது. ஆனால், செயலில் காட்ட முடியும். லாக் - அப் மரணங்கள் தொடராமல் தடுக்க முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in