மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்  குமார்
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் குமார்

`நண்பனை நான்தான் கொன்றேன்'- காட்டிக் கொடுத்த சிசிடிவியால் நாடகமாடிய வாலிபர் சரண்டர்

குடிபோதையில் நண்பனை அடித்து கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததாக நாடகமாடிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேடவாக்கம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் குமார் (48). டிரைவரான இவர், கடந்த 5-ம் தேதி வேளச்சேரி மெயின் ரோடு, பள்ளிக்கரணை குழந்தையேசு கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டு சுயநினைவின்றி கிடந்ததாக கூறி அவரது நண்பர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமார் கடந்த 24-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தன்று விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, டிரைவர் குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சம்பவத்தன்று குமாருடன் யார்? யார் இருந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே நேற்று குமாரின் நண்பரான பள்ளிக்கரணையை சேர்ந்த கார்த்திக் (24) பள்ளிக்கரணை கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்து குமாரை கொலை செய்து நான் தான் என்று கூறினார். உடனே கிராம நிர்வாக அதிகாரி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் கார்த்திகை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக கார்த்திக் பணியாற்றி வருவதும் சம்பவத்தன்று கார்த்திக்கும், குமாரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கு ஏறிய நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக், குமாரை மார்பில் எட்டி உதைத்துள்ளார். அப்போது கீழே வி்ழுந்த குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சு இன்றி மயங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்துடன் அடையாளம் தெரிய வாகனம் மோதி விபத்து நடந்ததாக நாடகமாடி ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்து சென்று ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சேர்த்தது தெரியவந்தது.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in