`தற்கொலை செய்யப் போகிறேன்'- பதறவைத்த பெண் இன்ஸ்பெக்டரின் ‘மெசேஜ்’

பரபரப்புக்குள்ளான ஈரோடு மாவட்ட காவல் துறை
`தற்கொலை செய்யப் போகிறேன்'- பதறவைத்த பெண் இன்ஸ்பெக்டரின் ‘மெசேஜ்’

தற்கொலை செய்யப் போவதாக ஈரோடு அனைத்து மகளிர் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் காவல் துறை உயரதிகாரிகளுக்கு தனது செல்போன் மூலம் ‘மெசேஜ்’ அனுப்பிய விவகாரத்தால், மாவட்ட காவல் துறை பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக நீலாவதி உள்ளார். இவர் நேற்று பணியில் இருந்தபோது தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக உயர் அதிகாரிகளுக்கு தனது செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த மெசேஜில் தனது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். இவரது மெசேஜால் ஈரோடு மாவட்ட கவால் துறை பரபரப்பானது.

இச்சூழலில் நீலாவதி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பேசிய இன்ஸ்பெக்டர், "உயரதிகாரிகள் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யப்போவதாக மெசேஜ் அனுப்பியது உண்மைதான்.

எனது இந்த ஒரு முடிவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரியும் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவரும்தான் காரணம். அந்த உயர் அதிகாரி சமுதாய ரீதியில் அரசியல் செய்கிறார். அந்த ஏட்டை ஒரு முறை நான் திட்டியதால் பழி வாங்கும் நோக்கில் என்னைப்பற்றி தவறான தகவலை உயர் அதிகாரிகளிடம் சொல்லி வருகிறார். இவர்களின் செயலால்தான் என்னை ஆயுதப்படைக்கு போக சொன்னது. எனது ஜீப் வாகனத்தை பறித்துக் கொண்டது போன்ற செயலில் உயர் அதிகாரி ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகதான் நான் தற்கொலைக்கு முயன்றேன்" என்றார். இது ஈரோடு மாவட்ட காவல் துறை பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இவரது மெசேஜ் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் அவரது ஆடியோ குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கூறுகையில், "ஆய்வாளர் நீலாவதி ஒரு உயர் அதிகாரி மீதும், தனிப்பிரிவு ஏட்டு மீதும் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் ஈரோடு டவுன் காவல் துணைக் காணிப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆய்வாளர் நீலாவதி மீதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. விசாரணைக் குழுவினர் உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு, ஆய்வாளர் நீலாவதியிடம் தனித்தனியாக விசாரணை நடத்துவர். விசாரணை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும்" என்றார்.

காதல் திருமணத்தால் வந்த பிரச்சினை

இந்த பிரச்சினைக்கான மூலக்காரணம் குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஆய்வாள் நீலாவதி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது நீலாவதி தனது குடும்பத்தினருடன் ஈரோடு சூரம்பட்டி வலசு காந்திஜி வீதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் உள்ளார். இதற்கு காரணம் ஒரு காதல் திருமணம்தான். கடந்த 13-ம் தேதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி பணியில் இருந்தபோது காதல் கலப்பு திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

நீலாவதி இரு வீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்தப் பெண் தனது காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அந்தப் பெண்ணை காதல் கணவருடன் அனுப்பி வைத்தார். புதுமண தம்பதிகள் ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த பெண்ணின் உறவினர்கள் அவரைக் காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி காவல் துறையினர் பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் புதுப்பெண் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தன்னை பெற்றோர் கடத்தவில்லை என்றும் தனது விருப்பத்தின் பேரில்தான் அவர்களுடன் சென்றேன் எனவும், பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது சம்பந்தமாக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் ஈரோடு மாவட்ட காவல் உயர் அதிகாரி ஒருவர் வாக்கி டாக்கியில் ஆய்வாளர் நீலாவதியை கடுமையாக எச்சரித்தார். இதில் அடைந்த மனவேதனையால் தான் நீலாவதி தற்கொலை செய்யப்போவதாக அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பினார். எஸ்பி உத்தரவின்படி விசாரணை நடத்தப்படுகிறது. இதன் முடிவில்தான் ஆய்வாளரின் தற்கொலை முடிவுக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்பது தெரியவரும்" என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in