`நான் இன்று மவுன விரதம்'- எஸ்.வி.சேகர் எஸ்கேப்

அவதூறு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வாக்குமூலம்
`நான் இன்று மவுன விரதம்'- எஸ்.வி.சேகர் எஸ்கேப்

பெண் பத்திரிகையாளரை அவதூறாகப் பேசி கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராகினார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பேட்டி கேட்ட செய்தியாளர்களிடம், "நான் இன்று மவுன விரதம்" என பதிலளித்து விட்டு எஸ்கேப் ஆனார் எஸ்.வி.சேகர்.

கடந்த 2018-ம் ஆண்டு நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தைகளை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு பத்திரிகை அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனை விசாரித்த சைபர் க்ரைம் காவல்துறையினர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே மறுத்துவிட்டது. இந்நிலையில், தனக்கெதிரான இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது எஸ்.வி.சேகர் தரப்பில் கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவரின் பதிவைத்தான் தெரியாமல் எஸ்.வி.சேகர் பார்வேர்ட் செய்ததாகவும், பின்னர் அந்த பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அப்பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி தரப்பில், முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்து விட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பியதுடன், சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்து கொள்ள முடியாத இவர் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லி கொள்கிறார் என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி.சேகர் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் தனது வழக்கறிஞரான வெங்கடேஷ் மகாதேவனுடன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணைக்குப் பின் வெளியே வந்த நடிகர் எஸ்.வி.சேகரின் வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை காவல்துறை முன்பு ஆஜராகி அளித்துள்ளதாகவும், இனி இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் எஸ்.வி.சேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, "நான் இன்று மவுன விரதம்" என அவரே கூறிக்கொண்டு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in