தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் கோம்பள்ளி பகுதியில் உள்ள சுசித்ரா நகர் ஜங்ஷன் அருகே சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பிற்பகல் நேரம் தொழிலாளர்கள் பணியின் போது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு குழாயைச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், குழாயில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது.
அப்போது, அந்த பகுதியில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த ஒருவர் அங்கு எரிவாயு கசிவு ஏற்பட்டது தெரியாமல், கையில் இருந்த சிகரெட்டை அணைக்காமல் வீசி எறிந்துள்ளார். இதனால் குழாயில் இருந்து கசிந்த சமையல் எரிவாயு பற்றி எரியத் தொடங்கியது.
இந்த சம்பவத்தின் போது, அங்கே நின்று கொண்டிருந்த 2 பேர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு அதனை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்து ஆகியவை பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.