மது வெறியில் தனது மனைவியை கம்பால் அடித்து கணவர் கொலை செய்துள்ள சம்பவம் நாகூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகேயுள்ள கடம்பங்குடியைச் சேர்ந்தவர் சிங்காரு (எ) சிங்காரவேல் (53). இவரது மனைவி முத்துலட்சுமி(48). இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள். அவர்களில் முதல் இரண்டு மகள்களுக்கு திருமணமாகியுள்ளது. 3-வது மகள் ஐஸ்வர்யா கடந்து ஒரு வருடத்துக்கு முன்பு, காதலித்தவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அதற்கு தன் மனைவி முத்துலெட்சுமி தான் காரணம் என கூறி சிங்காரவேல் குடிபோதையில் அடிக்கடி மனைவி முத்துலெட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சிங்காரவேல் அதிகமாக குடித்து விட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்தவர் வழக்கம் போல் மனைவி முத்துலெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி அங்கிருந்த மூங்கில் கம்பை எடுத்து முத்துலட்சுமியின் தலையில் அடித்துள்ளார். இதை பார்த்து பதறிய முத்துலெட்சுமியின் மூத்த மகள் ஹேமலதா தந்தையை தடுத்துள்ளார். ஆனால் மதுவெறியில் தலைகால் புரியாத நிலையில் இருந்த சிங்காரவேல், மகள் ஹேமலதாவை கீழே தள்ளிவிட்டு விட்டு, முத்துலெட்சுமியை சரமாரியாகத் தாக்கினார்.
இதில் மூர்ச்சை அடைந்த முத்துலெட்சுமி அங்கேயே உயிரிழந்தார். இதனைக் கண்டதும் சிங்காரவேலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் சென்று, கொலை செய்யப்பட்ட முத்துலெட்சுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் சரகம் சோழங்கநல்லூரில் பதுங்கியிருந்த சிங்காரவேலை நாகூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிய மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.