அம்மிக்கல்லைப் போட்டு மனைவியை கொலை செய்த கணவர் சரண்

சென்னையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்
அம்மிக்கல்லைப் போட்டு மனைவியை கொலை செய்த கணவர் சரண்
சித்தரிக்கப்பட்டப் படம்

திண்டிவனம், கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

சுப்பிரமணிக்கு, 2015-ல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கனிமொழியுடன் (24) திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

சுப்பிரமணி
சுப்பிரமணி

திருமணமான 2 வருடத்திலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கனிமொழி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சுப்பிரமணி அடிக்கடி மாமியார் நிர்மலா வீட்டுக்குச் சென்று, தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுப்பிரமணி வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிவதால், கனிமொழியை அவருடன் அனுப்ப தாய் மறுத்து வந்தார்.

நேற்று, மீண்டும் சுப்பிரமணி மாமியார் வீட்டுக்கு வந்து மனைவி கனிமொழியை தன்னுடன் வாழ அனுப்புமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் கனிமொழி தனது தாயுடன் அறைக்குத் தூங்கச் சென்றனர். அனைவரும் சென்ற பின்னர், சுப்பிரமணி யாருக்கும் தெரியாமல் மனைவி வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று பதுங்கியுள்ளார்.

அதிகாலையில் கனிமொழி தனது மகனுடன் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த கணவர் சுப்பிரமணி அருகிலிருந்த அம்மிக்கல்லை எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்த மனைவி கனிமொழி தலையில் போட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் கனிமொழி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அலறல் சத்தம் கேட்டு எழுந்து ஓடிவந்த தாய் நிர்மலா, மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் ஐஸ் ஹவுஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கனிமொழி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கணவர் சுப்பிரமணி மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் கூறி, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஜாம்பஜார் போலீஸார் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஐஸ்ஹவுஸ் போலீஸார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கனிமொழிக்கு கடந்த 3 வருடங்களாக வேறொரு நபருடன் தொடர்பு இருந்து வந்ததால், ஆத்திரமடைந்த கணவர் சுப்பிரமணி மனைவியைக் கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.

Related Stories

No stories found.