
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த திங்களன்று முதிய பெண்மணி ஒருவர் கட்டி வைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்படுவதும், கொதிக்கும் வெந்நீரை ஊற்றி சித்தரவதை செய்யப்படுவதுமாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. பலரும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், கவுஹாத்தி போலீசார் இதுதொடர்பாக சமஜோதி என்ற நபரை கைது செய்துள்ளனர்.
ஹெங்கராபரியில் அமைந்துள்ள மாவட்ட ஆணையர் அலுவலகம் அருகே இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதை கண்ட பக்கத்து வீட்டினர், சமஜோதியை சிக்க வைக்கும் நோக்கத்துடன் இந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
மூதாட்டி கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திஸ்பூர் காவல் நிலைய போலீஸார் சமஜோதியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இத்தகைய கொடூரமான செயலின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.