எச்சரிக்கை: குழந்தையின் உயிருக்கு இப்படியும் நேரலாம் ஆபத்து!

எச்சரிக்கை: குழந்தையின் உயிருக்கு இப்படியும் நேரலாம் ஆபத்து!

வீட்டில் வளையவரும் சிறு குழந்தைகளின் உயிருக்கு இப்படியும்கூட ஆபத்து வரலாம் என்பதற்கு உதாரணமாய் பல விபரீத சம்பவங்கள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றன. இனியொரு துயரம் இன்னொரு குடும்பத்தில் நேரக்கூடாது என்பதற்காகவேனும், இந்த சோக சம்பவங்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

பொன்னேரி, பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் வசந்தன். இவரது மூன்று வயது மகன் சஞ்சீஷ்வர். அண்மையில் வீட்டில் அங்குமிங்கும் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென கண்கள் பிதுங்க தத்தளித்து இருக்கிறான். வீட்டிலிருந்த பெரியவர்கள் குழந்தையை தூக்கி ஆராய்ந்தபோது, சஞ்சீஸ்வர் திடீரென மூச்சு விடவும் முடியாது தவித்தது தெரிந்தது. உடனடியாக பழவேற்காடு அரசு மருத்துவனையில் குழந்தையை அனுமதித்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த பொருள் குறித்து ஆராய்ந்தனர். பின்னர் மேலதிக மருத்துவ உதவிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சஞ்சீஸ்வர் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் தொண்டையில் சிக்கியது, சிறிய தேங்காய் சில்லு என்பது தெரிய வந்தது.

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிறுவனின் தொண்டையில் சிக்கிய தேங்காய் சில்லு அவனது உயிரை பரிதாபமாய் பறித்துவிட்டது. தேங்காய் சில்லு ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்தான முழு விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால் தேங்காய் சில்லு ஒன்று, சிறுவனின் உயிரைப் பறித்திருப்பது மட்டும் தெளிவாகி உள்ளது.

சம்பவத்தன்று வீட்டில் சமைப்பதற்காக அரிந்து வைத்திருந்த தேங்காய் சில்லுகளில் ஒன்றை சிறுவன் சஞ்சீஷ்வர் எடுத்து சாப்பிட முயன்றிருக்கிறான். ஆனால் அது ஏடாகூடாமாய் தொண்டையிலும், உணவுக் குழலிலும் சிக்கி பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்திருக்கிறது. இதே போன்ற அவல சம்பவங்கள் இதற்கு முன்னதாக செய்தியாக வெளியாகி இருப்பினும், பெற்றோர் மற்றும் பெரியவர்களின் அலட்சியத்தால் விபரீதங்கள் தொடர்கதையாகின்றன.

குழந்தையின் கையெட்டும் வகையில் மருந்து பொருட்கள் மற்றும் கிருமிநாசினிகளை வைக்கக்கூடாது, குழந்தைகள் உண்ணும்போது உடனிருக்க வேண்டும், வீட்டில் விளையாடும் குழந்தைகளை கண்பார்வையில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும், வீட்டில் தண்ணீர் நிரம்பிய தொட்டிகள் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும், கூர்மையான பொருட்கள் குழந்தைகளின் கையில் கிடைக்காது பார்த்துக்கொள்ள வேண்டும், கட்டில் போன்ற உயரமான இடங்களில் தனியே குழந்தைகளை உறங்கவிடக்கூடாது.. என்பது உட்பட பல மோசமான அனுபவ உண்மைகளை, செய்திகள் என்ற பெயரில் அன்றாடம் கடந்து வருகிறோம்.

அப்படியும் குழந்தைகளின் உயிருக்கு பெரியவர்களின் அலட்சியமே எமனாகி வருகிறது. பெரியவர்களில் அலட்சியத்துக்கு அப்பாவி குழந்தைகள் பலியாவது, அந்தப் பிஞ்சுகளை துள்ளத்துடிக்க கொல்வதற்கு சமமானது என்பதை உணர்வோம்; இதுபோன்ற இன்னொரு துயரம் நேராதிருக்கட்டும்.

Related Stories

No stories found.