'இவரின் செயலை ஏற்க முடியாது: முன்ஜாமீனும் வழங்க முடியாது!'

திமுக நிர்வாகியை வறுத்தெடுத்த நீதிபதி
'இவரின் செயலை ஏற்க முடியாது: முன்ஜாமீனும் வழங்க முடியாது!'

சென்னை ராயபுரம் பகுதி 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன். கடந்த 30-ம் தேதி நள்ளிரவு ராயபுரத்தில் தனது ஆதரவாளர்களுடன் மது அருந்தியிருந்ததாகவும், அவர்களது வாகனங்களைச் சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் இருந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸார் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோர் கூட்டமாக நின்றிருந்தவர்களைப் பார்த்து, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த ஜெகதீசன், "எங்களை கேட்பதற்கு நீங்கள் யார்?" எனவும், "நான் இந்தப் பகுதி கவுன்சிலர். நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன்" என்று மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக காவலர் தியாகராஜன் அளித்த புகாரின் பேரில், ஜெகதீசன், சதீஸ், வினோத் உள்ளிட்ட 5 பேர் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெகதீசன், சதீஸ், அறிவழகன் வினோத் ஆகிய 4 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, “ சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் உள்ள காவலர்களை மிரட்டும் இந்த நபர்களால் மற்றவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? இதனை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல்துறைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இது போன்ற செயல்களை ஏற்க முடியாது எனவும், தற்போதைய நிலையில் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால் இது போன்ற செயல்கள் தொடர்வதற்கே வழிவகுக்கும்” எனக்கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in