
நாய்க்கு ’நூரி’ என பெயர் வைத்து ராகுல் காந்தி இஸ்லாம் மதத்தை புண்படுத்திவிட்டார் என கூறி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் செய்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி சமீபத்தில் கோவாவில் இருந்து வாங்கிய ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார். இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார்.
பிறந்து 3 மாதங்களே ஆன இந்த நாய்க்குட்டியை சோனியா காந்திக்கு வழங்கியது, சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. அப்போது ராகுல் காந்தி அந்த நாய்க்கு ‛நூரி' என பெயரிட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுக்கு அளித்த நாய்க்கு 'நூரி' என்று பெயர் வைத்ததை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
நூரி' என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது. குரானில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் முகமது பர்கான் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.