
பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் இரண்டு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். எந்நேரமும் அவர்மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயலாம் என காவல்துறை வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், நீண்ட இழுபறிக்குப் பிறகு, இரவு நேரத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கொடிக்கம்பத்தை அகற்றியிருக்கின்றனர். கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டு, அருகிலிருந்த மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தவர்கள்மீது அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது, பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்த எல்லோரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், அமர் பிரசாத் ரெட்டி கைதாகாமல் அண்ணாமலையின் வீட்டுக்குள் சென்றுவிட்டார். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் அமர்பிரசாத் ரெட்டியும் இருந்ததால், வீட்டுக்குள் சென்று அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதாவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னர், “எங்கள் கொடியைத் தொட்டால் தமிழ்நாட்டில் உங்கள் கொடி பறக்காது என்று தமிழக முதல்வரை எச்சரிக்கிறேன்” என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் அமர் பிரசாத் ரெட்டி கைதுசெய்யப்பட்டது, பா.ஜ.க-வினருக்குச் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் சனி, ஞாயிறு, ஆயுத பூஜை, விஜயதசமி எனத் தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை வருவதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதால், பா.ஜ.க-வினரால் உடனடியாக ஜாமீன் மனுகூடத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அமர் பிரசாத் ரெட்டியைப் பொறுத்தவரை அரசுக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பலமுறை உதிர்த்திருக்கிறார்.