மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 28 பேர் பலி: வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 28 பேர் பலி:  வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததில் 28 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திங்கள்கிழமை அதிகாலை போடாட்டில் உள்ள ரோஜித் நகரம் அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் பல நபர்களின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து, பர்வாலா மற்றும் போடாட் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அவர்களை கொண்டு சென்றபோது, அவர்கள் போலி மதுபானம் அருந்திய விவரம் அம்பலமானது.

முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தை சேர்ந்த பெண் உட்பட ஒரு கும்பல், அதிக விஷத்தன்மை கொண்ட மெத்தில் எனும் ரசாயனத்தை (மெத்தனால்) தண்ணீரைக் கலந்து கிராம மக்களுக்கு 20 ரூபாய்க்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இறந்தவர்களின் உடலில் நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அவர்கள் மெத்தனால் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 28 பேர் இந்த போலி மதுபானம் அருந்தி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 22 பேர் போடாட் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். ஆறு பேர் அஹமதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மேலும் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் தற்போது பாவ்நகர், போடாட் மற்றும் அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

மேலும், "தடயவியல் பகுப்பாய்வில் இறந்தவர்கள் மெத்தில் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் 14 பேர் மீது கொலை மற்றும் பிற குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதில் பெரும்பாலானவர்களை கைது செய்துள்ளோம்" என்று கூறினார்.

குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) மற்றும் அஹமதாபாத் குற்றப்பிரிவு ஆகியவை கூடுதலாக இந்த விசாரணையில் இணைந்துள்ளன. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்பிப்பதற்காக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் ஒரு குழுவை குஜராத் உள்துறை அமைத்துள்ளது.

இதுவரை நடந்த போலீஸ் விசாரணையில், ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர், தான் மேலாளராக பணிபுரிந்த அஹமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மெத்தில் மதுபானத்தை எடுத்துச் சென்றுள்ளார். அதை போடாட்டைச் சேர்ந்த தனது உறவினர் சஞ்சய்க்கு ஜூலை 25-ம் தேதி ரூ.40,000-க்கு வழங்கியது தெரியவந்துள்ளது. இது ஒரு தொழில்துறை அமிலம் என்று தெரிந்தும், சஞ்சய் அந்த ரசாயனத்தை வியாபாரிகளுக்கு விற்றார். அவர்கள் அந்த ரசாயனத்தில் தண்ணீரைக் கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்றனர். இதுவே 28 பேரின் மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து கேள்வியெழுப்பியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், “ மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமாக குஜராத் இருந்தால், அந்த மாநிலத்தில் எப்படி மது விற்பனை செய்யப்படுகிறது, இதனால் யாருக்கு லாபம்?. குஜராத்தில் இது முதல் முறையல்ல. அரசு ஏன் இதை கவனிக்கவில்லை. அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா?" என்று தெரிவித்துள்ளார்

முன்னதாக, குஜராத்தில் தடை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக திங்களன்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in